கல்விக்கடன் தேவையே கல்வி கட்டணம் அதிகரிக்கப்பட்டதுதான்.
இன்று அரசாங்கம் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்த்துவிட்டு அவற்றின் முதலாளிகளின் வருமானத்திற்காக கல்விக்கட்டணங்களையும் அதிகரிக்கச்செய்துள்ளன.
இந்த கல்வி வியாபாரிகள் தங்களது வருமானம் குறைவிலாமலிருக்க, அரசை இவர்கள் பயன்படுத்தும் ஒரு முறை தான் கல்விக்கடன். இவர்களால் பொது மக்களின் பணத்தை கட்டுப்பாடுகள் அதிகமின்றி திரும்பி வருவதற்கான முழுமையான உத்திரவாதம் இன்றி கல்வி கடன் வழங்கப்பட வலியுறுத்தப்படுகிறது.
கல்விக் கடனை ஊக்கப்படுத்தும் அரசு மற்றும் மற்ற அமைப்புகள் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்படாமலிருக்கவோ அல்லது கல்வி கட்டணங்களை குறைக்கவோ முயற்சி செய்ய தவறுவது ஏன்?
கல்வி கடன் வழங்கப்பட கூடாது அல்லது கல்விகடன் தேவையில்லை என்பதை விட தேவையானவர்களுக்கு மட்டும் கல்விகடன் வழங்கப்பட வேண்டும் என்பது தான் வாதம். ஒருவருடத்திற்கு தனது குழந்தையின் கல்விக்கான செலவை எதிர்கொள்ள வழியில்லாதவர்களுக்கு இது போன்ற கல்வி கடன் அவசியம் வழங்கப்பட வேண்டும்.
தனது குழந்தையை மாதம் சில, பல ஆயிரம் பணம் வசூலிக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கும் வசதியுள்ளவர்கள், மெட்ரிக் பள்ளிகளின் கட்டணங்களுக்கு சிறிதளவே உயர்வான கல்லூரி கட்டணம் செலுத்த மட்டும் கடன் எதிர்பார்ப்பது எத்தகைய மனோபாவம் என்பது தெரியவில்லை.
எதையும் இலவசமாக பெற்றுவந்த இந்த மக்கள், இது நாள் வரை இலவசமாக பெற்றுக் கொண்டிருந்த கல்வி - இன்று கட்டணமயமானதை உணரமறந்து அல்லது மறுத்து - கல்வி முதலாளிகளின் கனவுகளை நிறைவேற்ற - கஜானாக்களை நிரப்ப - வங்கிகளை முற்றுகையிட்டு பொதுப்பணத்தில் இக்கல்வி முதலாளிகள் செழித்தோங்க வழிவகை செய்கின்றனர்.
இவற்றை மறந்து அரசும் சரி பெற்றோரும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணங்களின் மீது ஒரு கட்டுப்பாடு கொண்டுவர முயற்சி செய்வது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக